நடிகை கீர்த்திசுரேஷ், தனது நீண்டகால நண்பரும், காதலருமான ஆண்டனி தட்டிலை நாளை கோவாவில் திருமணம் செய்கிறார். சமீபத்தில் காதல், காதலன், திருமண செய்தியை முறைப்படி அறிவித்தார். சரி, கோவாவில் திருமணம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? சென்னையில் இருந்து யாரெல்லாம் செல்கிறார்கள்? குறிப்பாக, கீர்த்திசுரேஷ் நண்பரும், நடிகரும், தவெக தலைவருமான விஜய் நேரில் சென்று வாழ்த்துகிறாரா? விஜய்சேதுபதி போகிறாரா? துணைமுதல்வர் உதயநிதி செல்வாரா? அவருடன் சேர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் போகிறாரா என்று கோலிவுட்டில் விசாரித்தால் பல புது தகவல்கள் கிடைக்கின்றன.
நடிகை கீர்த்திசுரேஷ் அவரை காதலிக்கிறார், இவரை காதலிக்கிறார் என சில ஆண்டுகளாகவே ஏகப்பட்ட தகவல்கள் கசிந்தன. அதற்கு மவுனத்தையே பதிலாக அளித்தார் கீர்த்தி. ஆனால், ரகுதாத்தா பட பாடல் வெளியீட்டு விழா நடந்தபோது, அந்த நட்சத்திர ஓட்டல் மாடியில் மீடியா நிருபர்களுடன் பேசியவர், தனது வாழ்க்கையில் இந்த ஆண்டு ஒரு முக்கியமான விஷயம் நடக்கப்போகிறது. அது குறித்து விரைவில் அறிவிக்கிறேன்’ என்று தனது திருமணம் குறித்து வெட்கத்துடன் சொன்னார். துபாய் மாப்பிள்ளையா? அவர் யார் என்று கேட்டபோது, விரைவி்ல சொல்கிறேன் என்று சிரித்தார். அடுத்த சில மாதங்களில் தனது நண்பரான ஆண்டனி தட்டிலை காதலிப்பதாகவும், திருமணம் என்று சோஷியல் மீடியாவில் அறிவித்தார்.
இன்றுவரை கீர்த்திக்கு நெருக்கமானவர்களுக்கே, சினிமாதுறையை சேர்ந்தவர்களுக்கே அந்த ஆண்டனியை பற்றி தெரியாது. பெரும்பாலானவர்கள் அவரை நேரில் பார்த்தது இல்லை. அவர் என்ன தொழில் செய்கிறார். அவர் குடும்ப பின்னணி, காதல் மலர்ந்த கதை என யாரும் தெரியாத புதிராக இருக்கிறது. அதேசமயம், அவர் வேறு மதம் என்பதால், கீர்த்தி மதம் மாறி திருமணம் செய்கிறார். அதற்காகவே கோவாவில் திருமணம் நடக்கிறது என்றும் ஒரு தரப்பு சொல்கிறது. ஆனால், கீர்த்தி தரப்பு இது குறித்து எதையும் சொல்லவில்லை.
சில வாரங்களுக்குமுன்பு திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த கீர்த்தி, கோவாவில் திருமணம் என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனார். கீர்த்திசுரேஷ் பூர்வீகம் நெல்லைமாவட்டம்திருக்குறுங்குடி. அங்கேதான் அவர் பாட்டி வசித்தார். அந்த ஊர்தான் டிவிஎஸ் குழுமத்தின் சொந்த ஊர். இதற்கிடையில் முன்னணி நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு கீர்த்திசுரேஷ் திருமண அழைப்பிதழ் கொடுத்த போட்டோ,வீடியோ எதுவும் வெளியாகவில்லை. கோவாவில் நடக்கும் திருமணம் இரு தரப்பை சேர்ந்த முக்கியமானவர்கள் மட்டுமே கலந்துகொள்கிறார்கள். பெரும்பாலான சினிமா நண்பர்களுக்கு அழைப்பு இல்லை என தகவல்
சினிமாவில் கீர்த்தியை அறிமுகப்படுத்திய பிரியதர்ஷன், தமிழில் அவருக்கு நெருக்கமான ஏ.எல்.விஜய், விஜய், விஜய்சேதுபதி, உதயநிதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் கூட திருமணத்துக்கு செல்வது சந்தேகம்தான். இப்போது அட்லி தயாரிக்கும் குஷி இந்தி ரீமேக்கில் நடிப்பதால், அவர் மட்டும் கலந்துகொள்ள வாய்ப்பு என்று கூறப்படுகிறது. நாளை திருமணம் முடிந்தவுடன் சென்னையில், அவர் தந்தை கேரளாவில் பிரபல தயாரிப்பாளர் என்பதால் திருவனந்தபுரம் அல்லது கொச்சியில் திருமண வரவேற்பு நடத்துவது குறித்து கூட இன்னமும் அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்படவில்லை. அவர் தந்தை பெரிய தயாரிப்பாளர், கோடீஸ்வரர், ஆனாலும், ஏனோ கீர்த்திசுரேஷ் திருமணம் எளிமையாக, சஸ்பென்ஸ் ஆக நடக்கிறது ’என்கிறார்கள் கோலிவுட்டில்.
ஒருவேளை நயன்தாரா பாணியி்ல தனது திருமணத்தை தனியார் ஓடிடிக்கு கீர்த்தி விற்றுவிட்டாரா? அல்லது திருமணம் என்பது தனிப்பட்ட நிகழ்ச்சி. அதில் கூட்டத்தை கூட்ட வேண்டாம். இந்த மாத இறுதியி்ல அல்லது அடுத்த ஆண்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தலாமா என்று நினைக்கிறாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.