காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சுனைனா. அதைத் தொடர்ந்து மாசிலாமணி, கவலை வேண்டாம், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படள்களிலும் அவர் நடித்து இருக்கிறார். இது தவிர ட்ரிப் என்ற திரைப்படத்தில் முதன்மை கதாநாயகியாகவும் நடித்திருந்தார்.
அவரது நடிப்பில் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ரெஜினா. இந்தப் படத்தை டோமின் டி சில்வா இயக்கியுள்ளார். எல்லோ பியர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் இப்படம் தயாரிக்கப்பட்டது. சதீஷ் நாயர் இதற்கு இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தில் சுனைனா உடன் இணைந்து விவேக் பிரசன்னா, நிவாஸ் ஆதித்தன் மற்றும் பலர் நடித்திருந்தனர். கதாநாயகியை முன்னணியாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் கடந்த ஜூன் 23ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகை சுனைனா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விரைவில் குணமடைந்து வருவேன் என்று பதிவிட்டு புகைப்படம் ஒன்றையும் வௌியிட்டுள்ளார். இதனால், அவருக்காக ரசிகர்கள் பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டு வருகின்றனர்.