இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து இவர் சில படங்களை இயக்கியிருந்தாலும் மார்க் ஆண்டனி திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. இதைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இப்படமானது 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வரும் என படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்தின் தீவிர ரசிகன் ஆவார். இந்நிலையில் இவர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தை பார்க்க இன்று (பிப்ரவரி 6) ரோகினி திரையரங்கிற்கு வருகை தந்துள்ளார். இரண்டு வருடங்கள் கழித்து அஜித்தை திரையில் காணும் மகிழ்ச்சியில் ரசிகர்கள் அஜித்தையும் விடாமுயற்சி திரைப்படத்தையும் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
The #GoodBadUgly Director Has Arrived At The Rohini Cinemas For #VidaaMuyarchi FDFS !! 😎 💫 pic.twitter.com/KqSqyE0QEL
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) February 6, 2025
இதைக் கண்ட ஆதிக் ரவிச்சந்திரன் செய்தியாளர்களின் சந்திப்பில் பேசியபோது, “ரசிகர்களின் கொண்டாட்டத்தை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் எப்பொழுதும் அஜித் சாரின் ரசிகனாக வந்து அவருடைய படங்களை பார்ப்பேன். அதேபோல்தான் விடாமுயற்சி படத்தையும் பார்க்க வந்துள்ளேன். அஜித் சாருக்கு போஸ்டர் ஒட்டிய பையன் நான். ஆனால் இப்போது அவரை இயக்கியது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம். அதைத்தவிர வேறு எந்த சந்தோஷமும் எனக்கு இல்லை. அஜித் சாரைப் போல உழைப்பாளி வேறு யாரும் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.