பிரபல நடிகை ஒருவர் சூர்யா 44 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் சூர்யா 44. கங்குவா திரைப்படத்திற்கு பின்னர் சூர்யா நடித்து வரும் இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, கருணாகரன், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்பராஜும் இணைந்து தயாரித்து வரும் நிலையில் சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அந்தமான், ஊட்டி, கேரளா போன்ற பகுதிகளில் பலக்கட்டங்களாக நடைபெற்று வந்தது. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் புது வரவாக பிரபல நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. அந்த நடிகை வேறு யாருமில்லை நந்திதா தாஸ் தான்.
நடிகை நந்திதா தாஸ் பார்த்திபன் நடிப்பில் வெளியான அழகி, மாதவன், சிம்ரன் ஆகியோரின் கூட்டணியில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றவர். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான நீர்ப்பறவை திரைப்படத்தில் நடித்திருந்த நந்திதா தாஸ், தற்போது பல வருடங்களுக்குப் பிறகு சூர்யா 44 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் சூர்யா 44 படத்தில் இவருடைய கதாபாத்திரம் எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருக்கும்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.