ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 மற்றும் வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து சிறிய இடைவெளிக்குப் பிறகு விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிப்பில் லால் சலாம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தில் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். மேலும் இப்படம் கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களம் என்பதால் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் இவர்களுடன் இணைந்து சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி சென்னையில் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் ரஜினி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏ ஆர் ரகுமான், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “என் அப்பாவை சங்கி என்று சொல்லாதீங்க. அவர் சங்கியாக இருந்தால் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாயாக நடித்திருக்கவே மாட்டார்” என்று கண் கலங்கியபடி பேசியிருந்தார்.
இதைத் தொடர்ந்து சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லையே, சங்கி என்பது இந்து மதத்தை குறிக்கக் கூடியது தானே? பின்பு எதனால் சங்கி என்று சொன்னால் வருத்தப்படுகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதேசமயம் லால் சலாம் படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும், படத்தின் விளம்பரத்திற்காகவும் சங்கி என்பது சம்பந்தமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மேடையில் பேசினார் என்றும் மற்றொரு தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகர் ரஜினி, “என் மகள் ஐஸ்வர்யா, சங்கி என்பதை கெட்ட வார்த்தை என்று சொல்லவில்லை. என் அப்பா எல்லா மதத்தையும் நேசிக்கக் கூடியவர் என்ற அர்த்தத்தில் தான் கூறினார். மேலும் இந்த விஷயம் படத்தின் ப்ரொமோஷனுக்காக பேசப்படவில்லை. படம் நன்றாக வந்திருக்கிறது. லால் சலாம் படம் மத நல்லிணக்கத்தை பேசக்கூடியது” என்று கூறியுள்ளார்.