சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். இவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து கௌதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை எனும் திரைப்படத்தை இயக்கினார். பின்னர் சிறிய இடைவெளிக்கு பிறகு விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரின் கூட்டணியில் லால் சலாம் திரைப்படத்தை இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா. இந்த படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். லைக்கா ப்ரோடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகின்ற பிப்ரவரி 9ம் தேதி வெளியாக இருக்கிறது.
இதற்கிடையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் “என் அப்பா சங்கி இல்லை. அவர் சங்கியாக இருந்திருந்தால் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாயாக நடித்திருக்க மாட்டார்” என்று கூறியிருந்தார். ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதேசமயம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லால் சலாம் படத்தின் ப்ரோமோஷனுக்காக தான் இது போன்ற சர்ச்சையை கிளப்பியுள்ளார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று நடந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ஐஸ்வர்யா, “லால் சலாம் படமானது மக்கள் சார்ந்த அரசியலை பேசுகிறது. அரசியல் இல்லாமல் யாரும் கிடையாது எதுவும் கிடையாது. அது நம்முடைய பார்வையை பொறுத்து மாறுகிறது. நான் இசை வெளியீட்டு விழாவில் சங்கி என்பது குறித்து பேசுவேன் என்பது அப்பாவுக்கு தெரியாது. நான் அப்படி பேசியது படத்தின் பிரமோஷனுக்காக என்று அப்பாவிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். சூப்பர் ஸ்டாரான என் அப்பாவின் படம் அப்படி ஓட வேண்டும் என்பது அவசியமில்லை. எந்த ஒரு அரசியலும் பேசாத படம் தான் ஜெயிலர். ஆனால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. நானாக இருந்தாலும் சரி, என் சகோதரியாக இருந்தாலும் சரி, எங்களுடைய சொந்த கருத்துக்களை ஊக்குவிக்க கூடியவர் தான் என் அப்பா. அவரிடம் அப்படி ஒரு கேள்வி எழுப்பினது வருத்தமாக இருக்கிறது” என்று பேசியுள்ளார்.
- Advertisement -