அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் நேற்று (ஏப்ரல் 10) உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சுனில் மற்றும் பலர் நடித்திருந்தனர். மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியிருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசை அமைத்திருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தாத நிலையில் நேற்று வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. அதாவது அஜித்தின் தீவிர ரசிகனான ஆதிக், ரசிகர்கள் அஜித்தை எப்படி எல்லாம் பார்க்க வேண்டும் என்று நினைத்தார்களோ அப்படி எல்லாம் காட்டியிருக்கிறார். மாஸ், ஆக்சன் மட்டுமில்லாமல் படம் முழுக்க அஜித் ரெஃபரன்ஸை வைத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படம் வெளியான முதல் நாளில் ரூ. 35 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகி இருக்கிறது. தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் இந்த படம் அதிக வசூலை வாரிக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.