அஜித் நடிப்பில் இரண்டு வருடங்கள் கழித்து இன்று (பிப்ரவரி 6) உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்க அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள இந்த படத்தின் திரை விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அஜித்தும், கயல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரிஷாவும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். இருவரும் இணைந்து காரில் லாக் ட்ரிப் செல்ல அவர்களுடைய கார், யாரும் இல்லாத பகுதியில் பிரேக் டவுன் ஆகி விடுகிறது. அதே நேரத்தில் அந்த வழியாக வரும் அர்ஜுன் (ரக்ஷித்) அஜித், திரிஷா இருவருக்கும் உதவி செய்ய முன்வருகிறார். எனவே அஜித் தனது மனைவி திரிஷாவை அர்ஜுனுடம் காரில் அனுப்பி வைக்கிறார். அதன் பிறகு அர்ஜுன் தன்னை வந்து அழைத்து செல்வார் என்று காத்திருந்த அஜித்துக்கு மிகப்பெரிய ஏமாற்றம் கிடைக்கிறது. அடுத்தது தனது மனைவி திரிஷாவை கடத்திச் சென்ற அர்ஜுனை தேடி செல்கிறார். அதன் பிறகு திரிஷாவை அஜித் கண்டுபிடித்தாரா என்பதுதான் படத்தின் மீதி கதை.
விடாமுயற்சி படமானது ஹாலிவுட் படத்தின் தகவல் தான் என்றாலும் அஜித்துக்கு ஏற்றார் போல் படத்தின் கதையில் சிறு சிறு மாற்றங்களை செய்திருக்கிறார் மகிழ் திருமேனி. அதன்படி திரைக்கதையை அருமையாக வடிவமைத்துள்ளார். அதே சமயம் எந்தவித பில்டப்பும் இல்லாமல் கதையோடு ஒன்றி கதையின் நாயகனாக மூன்று விதமான லுக்கில் கலக்கி இருக்கிறார் அஜித். மேலும் சண்டை காட்சிகளிலும் மாஸ் காட்டி உள்ளார். அதிலும் குறிப்பாக கார் சண்டைக்காட்சியில் பட்டைய கிளப்பியுள்ளார் அஜித். அடுத்தபடியாக நடிகை திரிஷாவின் கதாபாத்திரம் வலுவாக அமைக்கப்பட்டு பல திருப்புமுனைகளை தருகிறது. இடைவேளையில் வரும் எதிர்பாராத திருப்பம் படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது. மேலும் அஜித், திரிஷா இருவருக்குமான பிளாஷ்பேக் போஷன் அனைவரையும் ரசிக்க வைக்கிறது. அதேசமயம் அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் சிறப்பான நடிப்பு வெளிப்படுத்தி தனது கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்துள்ளனர். அனிருத்தின் பிஜிஎம் படத்திற்கு பெரும் பலம் தந்துள்ளது. இது தவிர இரண்டாம் பாதியை விட முதல் பாதி மெதுவாக நகர்வதுதான் படத்தின் மைனஸாக அமைந்துள்ளது. இருப்பினும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு காத்திருந்த ரசிகர்களுக்கு தரமான தரிசனம் கொடுத்துள்ளார் அஜித். மொத்தத்தில் விடாமுயற்சி ரசிகர்களுக்கு திருவிழா.