விஜய் ரசிகர் ஒருவர் நடிகர் அஜித்தின் செயலால் வியந்து போனதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் நடிகராக இருப்பவர் அஜித் குமார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான துணிவு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்தப் படத்தை அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் புதிய படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கிடையில் அஜித் பல நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். எனவே அவரை அடிக்கடி விமான நிலையங்களில் பார்க்க முடிகிறது. அவர் விமான நிலையங்களில் ஊழியர்கள் மற்றும் ரசிகர்கள் உடன் காணப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் விஜய் ரசிகர் ஒருவருக்கு அஜித்தின் செயல் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 10 மாத குழந்தையை சுமந்து வந்த ஒரு பெண்மணியின் லக்கேஜ்களை அஜித் சுமந்து வந்துள்ளார். அந்த பெண்மணியின் கணவர் ஒரு விஜய் ரசிகர்.
இதுகுறித்து தெரிவித்த அவர் “என் மனைவி இன்று கிளாஸ்கோவிலிருந்து சென்னைக்கு பயணம் செய்தார். எங்களுடைய 10 மாத குழந்தையுடன் தனியாக அவர் பயணம் செய்து வந்தார். அவருக்கு லண்டன் ஹீத்ரோவில் அஜித்குமாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஒரு கேபின் சூட்கேஸ் மற்றும் குழந்தையுடன் பயணம் செய்தார்.
அப்போது என் மனைவி தனியாக பயணம் செய்வதை அறிந்த அஜித் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதித்ததுடன், விமானம் செல்லும் வரை மனைவியின் லக்கேஜை சுமந்து வந்த சூப்பர் மனிதராக இருந்துள்ளார்.
என் மனைவி அவர் லக்கேஜ் சுமந்து வருவதை மறுத்தபோது, “பரவாயில்லை. எனக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அதை என்னால் புரிந்துகொள்ள முடியும்” என்று பதில் அளித்துள்ளார்.
அஜித்தின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.