ஹைதராபாத் சந்தியா தியேட்டர் கூட்ட நெரிசல் அல்லு அர்ஜுனுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த சம்பவத்தை அல்லு அர்ஜுன் ஒருபோதும் கற்பனை செய்திருக்க மாட்டார். நேற்று, அல்லூ அர்ஜூன் போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அப்போது அவர் உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக, இந்த சம்பவத்திற்கு அல்லு அர்ஜுன் சரியாக பதிலளிக்கவில்லை என்றும், அவர் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்கவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர். அவரது சட்டக் குழுவின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் அல்லு அர்ஜுன் அதற்கு விளக்கமளித்துள்ளார்.
நேற்று நடந்த விசாரணையில் அல்லு அர்ஜுன் உணர்ச்சி வசப்பட்டதாகக் கூறப்படுகிறது. அல்லு அர்ஜுனிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு, சந்தியா திரையரங்கில் நடந்த புஷ்பா 2 சிறப்புக் காட்சியில் ஏற்பட்ட நெரிசலின் வீடியோக்கள் காண்பிக்கப்பட்டன. வீடியோவில், ஸ்ரீதேஜ், ரேவதி காயமடைந்த காட்சிகளைப் பார்த்து அல்லு அர்ஜுன் உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக அல்லு அர்ஜுனின் பத்திரிகையாளர் சந்திப்பு கலவையான எதிர்வினைகளைப் பெற்றது. இருப்பினும், இந்த வீடியோக்களைப் பார்த்த பின் அல்லு அர்ஜுன் அதிர்ச்சியில் இருப்பதாகவும், போலீஸ் விசாரணையின்போது அவர் தனது மனநிலையை வெளிப்படுத்தியதாகவும், அதன் பிறகே ரூ.2 கோடி இழப்பீட்டை வழங்க அல்லு அர்ஜூன் முன் வந்ததாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.