புஷ்பா 2 படத்தின் திரைவிமர்சனம்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில், ஜெகபதி பாபு, சுனில் ஆகியோர் நடித்துள்ள படம் தான் புஷ்பா 2 – தி ரூல். இந்த படம் இன்று (டிசம்பர் 5) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த படத்தைக் காண ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆவலுடன் திரையரங்குகளுக்கு திரண்டு வருகின்றனர். தற்போது இந்த படத்தின் திரைவிமர்சனத்தை காணலாம்.
புஷ்பா முதல் பாகமானது செம்மரக்கட்டை கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த நிலையில் முதல் பாகத்தின் இறுதியில் அல்லு அர்ஜுன் (புஷ்பராஜ்) மற்றும் பகத் பாசில் (காவல்துறை அதிகாரி பன்வர் சிங்) ஆகிய இருவருக்கும் இடையில் மோதல் ஆரம்பிப்பது போல் முடிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது முதல் பாகம் எந்த இடத்தில் முடிந்ததோ அந்த இடத்திலிருந்து இரண்டாம் பாகம் தொடங்கியுள்ளது. செம்மரக்கட்டையுடன் ஜப்பானுக்கு செல்லும் புஷ்பா ஜப்பான் துறைமுகத்தில் உள்ள மாஃபியாவுடன் சண்டை போட்டு செம்மரக்கட்டை பிசினஸில் மிக உயர்ந்த நிலையை அடைகிறார். அதாவது தனக்கென தனி ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி முழு கூட்டத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார். அதேசமயம் புஷ்பாவை தடுக்கப் பன்வர் சிங் திட்டமிட்டு காட்டிற்குள் சென்று புஷ்பாவின் ஆட்களை கைது செய்கிறார். தனது ஆட்களை விடுவிக்க வரும் புஷ்பா காவல்துறையினர் அனைவரையும் அடித்தது நொறுக்குகிறார். அதன் பிறகு தனக்கு தடைகள் வரும்போது எல்லாம் தடையாக வரும் ஒவ்வொருவரையும் தனது பணத்தால் விலைக்கு வாங்குகிறார். ஒரு கட்டத்தில் முதல்வரையே விலைக்கு வாங்க திட்டமிடுகிறார் புஷ்பா. அதன் பின்னர் அவர், செம்மரக்கட்டை பிசினஸில் ஏற்படும் சிக்கல்களை எப்படி சமாளித்து மீண்டும் வருகிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை.
நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா முதல் பாகத்தில் நடித்து மிகப் பெரிய வெற்றி பெற்று தேசிய விருதினையும் வென்றார். அதேபோல் இந்த படத்திலும் ஆக்சன் காட்சிகள், ரொமான்ஸ் என அனைத்திலும் ருத்ர தாண்டவம் ஆடி முழு படத்தையும் தனது தோளில் தாங்கிப் பிடித்துள்ளார் அல்லு அர்ஜுன். அதேசமயம் அல்லு அர்ஜுனுக்கு இணையாக பகத் பாசிலும் தனது வில்லத்தனத்தில் பட்டய கிளப்பில் ஸ்கோர் செய்கிறார். படத்தின் மேக்கிங் படத்திற்கு மிகப்பெரிய பலம் தந்துள்ளது. ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரம் இரண்டாம் பாகத்தில் வலுவாக அமைக்கப்படவில்லை. இருப்பினும் அல்லு அர்ஜுனுக்கு நிகராக நடனமாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். அதேபோல் ஸ்ரீலீலாவும் தனது நடனத்தின் மூலம் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார். படத்தில் நகைச்சுவை காட்சிகள் ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. சாம் சி எஸ் இன் பின்னணி இசை தெறிக்க விடுகிறது. ஆனால் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. இருப்பினும் தனது மாயாஜாலத்தால் சலிப்பை ஏற்படுத்தாத முயற்சியை மேற்கொண்டுள்ளார் சுகுமார். ஆனால் கதையின் விறுவிறுப்பு சற்று குறைவு. மேலும் ரன்னிங் டைம் படத்தின் மைனஸ் என்று சொல்லலாம். மொத்தத்தில் அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கும் ஆக்ஷன் விரும்புகளுக்கும் இந்த படம் நல்ல விருந்து படைக்கும்.