கடந்த அக்டோபர் 31ஆம் நாளில் தீபாவளி தினத்தன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசன் இந்த படத்தை தயாரித்திருந்தார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்படுகிறது. அந்த வகையில் இந்த படம் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று கிட்டத்தட்ட 300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. மேலும் இந்த படம் பெரும்பாலும் காஷ்மீரில் படமாக்கப்பட்டது. அதேசமயம் சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் இப்படத்தில் சாய் பல்லவி தோன்றும் காட்சி ஒன்றில் ஒரு மொபைல் எண் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அந்த எண் தன்னுடைய எண் என பொறியியல் மாணவர் வாகீசன் என்பவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் படம் வெளியான முதல் நாளிலிருந்து தொடர்ந்து வரும் அழைப்புகளால் தன்னால் தூங்கவோ, படிக்கவோ, மற்ற வேலைகளை செய்யவோ முடியவில்லை என தனது வேதனையை தெரிவித்து படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் 1.1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த தகவல் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.