கடந்த 2007 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் பருத்திவீரன். படம் வெளியான நாள் முதலே படத்தின் இயக்குனரான அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் இடையில் சலசலப்பு ஏற்பட்டது. முன்னதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குனர் அமீர் பொய் கணக்குகள் காட்டி பணத்தை மோசடி செய்து விட்டார் எனவும் அவருக்கு படம் எடுக்க தெரியாது என்றும் தொடர்ந்து பேசி வந்தார். ஆரம்பத்தில் இருந்தே இதனை அமீரும் மறுத்து அவ்வப்போது பதில் அளித்து வந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஞானவேல் ராஜா அளித்த பேட்டி ஒன்றில் அமீரை மிகவும் தரக்குறைவாக விமர்சித்து அவமானப்படுத்தும் விதமாக பேசியுள்ளார். இதனால் இயக்குனர் அமீர் மிகவும் மனமடைந்து உண்மை தெரிந்தவர்களும் அமைதியாக உள்ளீர்களே என்று தன் வேதனையை வெளிப்படுத்தினார். இதனால் படத்தில் பணிபுரிந்த உண்மை அறிந்த பிரபலங்கள் அமீர் மீது எந்த தவறும் இல்லை என்றும் ஞானவேல் ராஜா தான் தேவை இன்றி பொய் குற்றச்சாட்டை முன் வைக்கிறார் என்றும் அமீருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். பிரபலங்களான சமுத்திரக்கனி, சசிகுமார் போன்றோரும் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
தற்போது இயக்குநரும், நடிகருமான கரு. பழனியப்பன் அமீருக்கு ஆதராக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அமீர் ஒரு நாள் கூட திரைப்பட இயக்குநர் சங்கத்தின் பணத்தில் ஒரு வேளை கூட சாப்பிட்டதில்லை என்றும், உடன் இருந்த நான் சாட்சி என்றும் கூறியுள்ளார். மற்றும் ஒரு இயக்குநரை திருடன் எனச் சொல்வது அயோக்கியத்தனம் என்றும், இதற்காக பொதுவெளியில் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் காட்டமாக பேசியுள்ளார். மேலும், இதற்கு பின்னால் நடிகர் சிவகுமாரும், அவரது மகன்களும் இருப்பார்களோ என்ற சந்தேக நிழலும் இருப்பதை தவிர்க்க முடியாது என்றும் கூறியுள்ளார்.