ரன்பீர் கபூரின் அனிமல் பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியான படம் அனிமல். அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் கவனம் பெற்ற சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்த இந்த படத்தை பத்ரகாளி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் ரன்பீர் கபூர் உடன் இணைந்து அனில் கபூர், பாபி தியோல், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே பல்வேறு தரப்பினர் இடையே எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. ஆணாதிக்கத்தினை மையமாக வைத்து வெளியான இந்த படம் தற்போது வரையிலும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் படத்தில் கடுமையான வன்முறை காட்சிகளும், ஆபாச காட்சிகளும் இடம் பெற்று இருப்பதால் திரை பிரபலங்கள் பலரும் படத்தை திட்டி தீர்த்து வருகின்றனர். இருந்த போதிலும் வட மாநிலங்களில் கிடைத்த வரவேற்பினால் அனிமல் படமானது 800 கோடிக்கும் மேல் வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது.
இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஜனவரி 26 அன்று நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.