அனுபமா நடிக்கும் லாக்டவுன்… முதல் தோற்றம் ரிலீஸ்…
- Advertisement -

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் கடந்த 2015-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கி இருந்தார். இப்படம் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அவருக்கு மலையாளத்தில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார்.

தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தின் மூலம் அவர் கோலிவுட் சினிமாவுக்கும் அறிமுகமானார். பின் மலையாளம், தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளிலும் மாறி மாறி அடுத்தடுத்து நடித்து வந்தார். கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்களை வெகுவாக் கவர்ந்தார். இத்திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து பரதா என்ற திரைப்படத்தில் அனுபமா நடித்திருக்கிறார்.

அடுத்து, தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு லாக்டவுன் என்று தலைப்பு வைத்து முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா படத்தை இயக்குகிறார்.