அனுஷ்கா நடிக்கும் காட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பெயர் பெற்றவர் நடிகை அனுஷ்கா. தமிழில் இவர் விஜயுடன் இணைந்து வேட்டைக்காரன், சூர்யாவுடன் இணைந்து சிங்கம், விக்ரமுடன் இணைந்து தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். அதேசமயம் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த தேவசேனா எனும் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதன்படி பாகுபலி திரைப்படம் அனுஷ்காவிற்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இருப்பினும் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை அதிகரித்து அனுஷ்காவிற்கு மீண்டும் உடல் எடையை போதுமான அளவு குறைக்க முடியாமல் போனது. இதனால் பட வாய்ப்புகளும் குறைய தொடங்கின. இருப்பினும் கடந்த ஆண்டில் வெளியான மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக இவர் காட்டி எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாக இருந்தார். இந்த படத்தை க்ரிஷ் ஜகர்லாமுடி இயக்க இந்த படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நாகவல்லி வித்தியாசாகர் இந்த படத்திற்கு இசையமைக்க மனோஜ் ரெட்டி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு படப்பிடிப்புகளும் நடத்தப்பட்டது. பின்னர் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டு ஐதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் நடிகை அனுஷ்கா, முகத்தில் ரத்தம் வடிய கையில் சுருட்டு ஒன்றை வைத்துக்கொண்டு மிரட்டலான லுக்கில் காணப்படுகிறார். மேலும் அந்த போஸ்டரில் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் நடிகை அனுஷ்காவின் 43வது பிறந்த நாளான இன்று (நவம்பர் 7) வெளியாகி இருக்கும் நிலையில் இணையத்தில் வைரலாகி வருகிறது.