இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் மதராஸி. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து பிஜு மேனன், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தூத்துக்குடி, சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு இருந்தது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், வித்தியாசமான தோற்றத்தில் காண்பிக்கப்பட்டார். அதைப் பார்க்கும்போது ஏ ஆர் முருகதாஸ், மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனை எப்படி காண்பித்திருப்பார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர் பேசியதாவது, “கஜினி படத்தில் மெமரி லாஸ், துப்பாக்கி படத்தில் ஸ்லீப்பர் செல்கள் போல இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் ஒரு தனித்துவம் கொண்டதாக இருக்கும். இதை மிக விரைவில் வெளிப்படுத்துகிறேன் என்று நினைக்கிறேன். ஆனால் அவருடைய கதாபாத்திரம் அசாதாரணமானதாக இருக்கும் என என்னால் சொல்ல முடியும். இந்த படம் கண்டிப்பாக அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். மதராஸி என்பது தென்னிந்தியர்களை குறிக்க பல வட இந்தியர்கள் பயன்படுத்தும் வார்த்தை. வட நாட்டு மக்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை” என்று தெரிவித்துள்ளார்.