தமிழ் சினிமா வரலாற்றில் இசை ஜாம்பவானாக திகழ்பவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். 1992 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதுவரை இசை ரசிகர்கள் கேட்டிடாத வண்ணம் புதுமையான தரத்தில் இசையை அமைத்திருந்தார். இது அன்றைய 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்து போய்விட முதல் படத்திலேயே மாபெரும் வரவேற்பை பெற்றார் ஏ ஆர் ரகுமான். அதுமட்டுமின்றி இப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும் பெற்று புது சரித்திரம் படைத்தார். தொடர்ந்து பாரதிராஜா, கே.பாலச்சந்தர், ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார் என பல முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றி தொடர் வெற்றிகளை கண்டார். இவருடைய இசையில் வெளியான பாடல்கள் அனைத்துமே புதுவிதமான அனுபவத்தை கொடுத்து அன்றைய இளைஞர்களை ஆட்டம் போடச் செய்தது. மெலோடி, கானா, கிராமத்து பின்னணி இசை, மேல்நாட்டு இசை, தேசப்பற்று என எந்த வெரைட்டி வேண்டுமென்றாலும் அதில் பல புதுமைகளை புகுத்தினார். இயல்பு வாழ்க்கையில் மென்மையான மனிதராக இருந்தாலும் தன்னுடைய இசை திறமையால் ரசிகர்களிடையே “இசைப்புயல்” எனும் பெயரை பெற்றார். மேலும் இவர், இந்திய இசையமைப்பாளர்களின் கனவாக இருந்த ஆஸ்கர் விருதையும் 2008ல் வெளியான SLUMDOG MILLIONAIRE படத்துக்காக வென்றார். அதுவும் ஒன்றல்ல இரண்டு ஆஸ்கர்களை கையில் ஏந்தி உலக அரங்கில் இந்தியர்களை பெருமைப்படச் செய்தார். இந்திய அளவில் கலைமாமணி, பத்மஸ்ரீ, ஆவாத் சமன், பத்மபூஷன் போன்ற பல விருதுகளையும், உலகளவில் பலதரப்பட்ட விருதுகளையும் வென்றுள்ளார். அதைத்தொடர்ந்து தற்போது 7வது முறை பொன்னியின் செல்வன் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான இந்திய தேசிய விருதையும் வென்று மேலும் ஒரு சாதனை படைத்துள்ளார். இதுவரை ரோஜா (1992), மின்சார கனவு (1996), லகான் (2001), கன்னத்தில் முத்தமிட்டாள் (2002), காற்று வெளியிடை, மாம் (2017), பொன்னியின் செல்வன் பாகம் 1 (2024) என ஏழு முறை தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார். இந்த செய்தியை ஏ ஆர் ரகுமானின் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருவது மட்டுமல்லாமல் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இன்று போல் என்றும் ஓயாத இசைப்புயலாய் இன்னும் பல சாதனைகள் படைக்க ஏ ஆர் ரகுமானுக்கு நாமும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.