ஷூட்டிங்கில் விபத்து.. நொடியில் உயிர்தப்பிய ஏ.ஆர்.ரகுமான் மகன்
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற ஆல்பம் பாடல் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
பாடல் படப்பிடிப்பதற்காக மேடை அமைக்கப்பட்டு, அதன் மேற்பரப்பில் வண்ண விளக்குகள் கட்டப்பட்டிருந்தது, படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத விதமாக மேடையில் மேற்பரப்பில் கட்டப்பட்டிருந்த வண்ண விளக்குகள் அடங்கிய சாரம், கொத்தோடு மேடையில் விழுந்துள்ளது. மேற்பரப்பில் இருந்த இடைவெளியால் நூலிலையில் தப்பித்ததாக, அந்த சம்பவம் குறித்து அமீன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
விபத்து நடைபெற்ற அந்த மேடையின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர், எல்லாம் வல்ல இறைவனுக்கும், எனது பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும், நலம் விரும்பிகளுக்கும், எனது ஆன்மிக ஆசிரியருக்கும் நன்றி கூறுகிறேன். மூன்று இரவுகளுக்கு முன்பு, நான் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பில் இருந்தேன், கேமரா முன் நடிப்பதில் கவனம் செலுத்தியபோது, மேடையில் உள்ள மற்ற விசியங்களை பொறியியல் மற்றும் பாதுகாப்பை குழு கவனித்துக்கொண்டிருக்கும் என்று நான் நம்பினேன்.
நான் மேடையில் அந்த இடத்தின் நடுவில் இருந்தபோது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரவிளக்குகள் அனைத்தும் கீழே விழுந்தன. இங்கும் அங்கும் சில அங்குலங்கள் இருந்திருந்தால், சில நொடிகள் முன்னரோ அல்லது பின்னரோ, மொத்த ரிக் நம் தலையில் விழுந்திருக்கும் எனவும். இந்த சம்பவத்தால் நானும் எனது குழுவினரும் அதிர்ச்சியடைந்து அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு அமீனின் தந்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ‘இறைவனின் அருள்’ என கமெண்ட் செய்துள்ளார். மேலும் தரமான படப்பிடிப்பு தளங்களை உருவாக்க அதனை மேம்படுத்த இந்திய திரைத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.