கோட் படம் குறித்து சில தகவல்களை வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபு சென்னை 600028, சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் தற்போது கோட் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க அவருடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மைக் மோகன், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருந்தார். சித்தார்த்த நுனி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இந்த படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. திரையிடப்பட்ட முதல் நாளிலிருந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று ஒரே நாளில் 126 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. படத்தில் இடம் பெற்ற கேப்டன் விஜயகாந்த், திரிஷா, சிவகார்த்திகேயன் போன்றோரின் கேமியோக்களும் அஜித், தோனி, சூர்யா ஆகியோரின் குறியீடுகளும் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுத்தது. அதேசமயம் கிளைமாக்ஸ் -இல் சிவகார்த்திகேயனுக்கும் மைக் மோகன் இடையிலான காட்சி ஒன்று நீக்கப்பட்ட காட்சியாக விரைவில் வெளியிடப்படும் என்று ஏற்கனவே வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், ” கோட் படத்தில் டைரக்டர் கட் என்பது 3 மணி 40 நிமிடங்களாகும். இதனை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஓடிடியில் கண்டிப்பாக வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்” . எனவே கோட் படத்தில் வெங்கட் பிரபு , தனது ஸ்டைலில் இயக்கியிருந்த காட்சிகள் ஓடிடியில் வெளியாகும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எனவே அந்த காட்சிகளை காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.