நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு ஹீரோவாக உருவெடுத்த அர்ஜுன் தாஸ், அநீதி, ரசவாதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார். அடுத்ததாக தமிழில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாக இருக்கிறது. இந்த படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் இளைய மகள் அதிதி சங்கர் நடிக்கிறார். அதிதி சங்கர் ஏற்கனவே கார்த்தியின் விருமன், சிவகார்த்திகேயனின் மாவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர் கூட்டணியில் உருவாகும் இந்த படமானது குட் நைட் மற்றும் லவ்வர் திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கீழ் தயாராகிறது. இதனை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்குகிறார். ஹேஷம் அப்துல் வாகப் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படம் தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் போன்ற அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.