நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் 70, 80 காலகட்டங்களில் இருந்து சினிமாவில் நடிக்க தொடங்கியவர். காதல், செண்டிமெண்ட் என அனைத்திலும் பின்னி பெடலெடுப்பார். பெரும்பாலான படங்களில் இவர் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். புரட்சிக்கலைஞர், கருப்பு எம்ஜிஆர், கேப்டன் ஆகிய பட்டங்களையும் மக்கள் மத்தியில் பெற்றுள்ளார். இவர் சின்ன கவுண்டர், கேப்டன் பிரபாகரன், ரமணா, சொக்கத்தங்கம் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார். இவர் கடைசியாக விருதகிரி படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடித்து வெளியான சகாப்தம் திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.
இதற்கிடையில் கடந்த 2005இல் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தொடங்கிய இவர் 2006 இல் சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கினார். இவ்வாறு சினிமாவிலும் அரசியலிலும் கம்பீரமாக தோற்றமளித்த விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்கா, சிங்கப்பூர் என வெளிநாடுகளில் சிகிச்சை பெற்றாலும் விஜயகாந்தின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இவருக்கு தைராய்டு சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் இருக்கிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட விஜயகாந்தின் வலது கால் விரல் ஒன்று சமீபத்தில் அகற்றப்பட்டது. அதனால் பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் எதுவும் விஜயகாந்த் பங்கு கொள்வது கிடையாது. தீபாவளி போன்ற பண்டிகை நாளில் மட்டும் அவரின் புகைப்படங்கள் வெளியிடப்படும்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக திடீரென நள்ளிரவில் விஜயகாந்த் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனைக்காக மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் எனவும் தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. மூன்றாவது தினமான இன்று விஜயகாந்த்திற்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் சளி, இருமல் காரணமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று தேமுதிக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்த போதிலும் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் அவதியுறும் தகவலை கேட்ட ரசிகர்களும் தொண்டர்களும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.