இட்லி கடை படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதற்கு அருண் விஜய் சில காரணங்களை கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய். இவரது நடிப்பில் கடைசியாக வணங்கான் திரைப்படம் வெளியானது. அதே சமயம் இவர் ரெட்ட தல திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் தனுஷ் இயக்கி, நடித்து வரும் இட்லி கடை படத்தில் வில்லனாக நடிக்கிறார் அருண் விஜய். தனுஷின் 52 வது படமாக உருவாகும் இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். கிரண் கௌசிக் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் தனுஷ், அருண் விஜயுடன் இணைந்து நித்யா மேனன், ராஜ் கிரண் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இப்படம் 2025 ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாகவும் விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சமூக வலைதள பக்கத்தில் அருண் விஜய், இட்லி கடை படத்தின் போஸ்டரை பகிர்ந்த போது ரசிகர் ஒருவர் இட்லி கடை படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அருண் விஜய், இன்னும் சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்படவில்லை என்றும் ஏப்ரல் 10ஆம் தேதி தல வருகிறார் என்றும் பதில் அளித்துள்ளார்.