வணங்கான் படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகி உள்ளது.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் வணங்கான். தொடக்கத்தில் நடிகர் சூர்யா தான் இந்த படத்தை தயாரித்து, நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு ஒரு சில காரணங்களால் சூர்யா விலகினார். இது குறித்து அறிவிப்பை இயக்குனர் பாலா வெளியிட்டார். அதன் பின் சூர்யாவிற்கு பதிலாக அருண் விஜய் நடிக்கிறார். அருண் விஜய்யுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரகனி, மமிதா பைஜூ உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். ஆர் பி குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அருண் விஜய் இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான பரிமாணத்தில் நடித்திருக்கிறார். இப்படம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்தில் தெரிவித்திருந்தார். எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது.
இந்நிலையில் அருண் விஜய்யின் 46 வது பிறந்த நாளை முன்னிட்டு வணங்கான் படக்குழுவினர் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அருண் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.