இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, தனுஷிடம் ஏற்கனவே கதை சொல்லி இருப்பதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. இவர் இயக்கிய முதல் படமே இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத் தர அடுத்தது டிராகன் திரைப்படத்தையும் இயக்கி பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளார். கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் வெளியான 10 நாட்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இதன் பின்னர் அஸ்வத் மாரிமுத்து, சிம்பு நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். சிம்புவின் 51வது படமான இந்த படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்த ஓ மை கடவுளே, டிராகன் படத்தை போல் இந்த படமும் வித்தியாசமான கதைக்களத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு 2025 ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் எனவும் 2026 இல் ரிலீஸ் ஆகும் எனவும் சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய அஸ்வத் மாரிமுத்து, “எனக்கு சிம்பு பிடிக்கும் என்பதற்காக தனுஷ் சாரை பிடிக்காது என்ற அர்த்தம் இல்லை. அவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏற்கனவே அவரை சந்தித்து கதை சொல்லி இருக்கிறேன். ஆனால் தனுஷ் சார், இப்போதைக்கு இதை பண்ண வேண்டாம் என்று சொல்லிவிட்டார்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் வருங்காலத்தில் தனுஷ், அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் புதிய படம் உருவாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.