தண்டகாரண்யம் – முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு
அட்டகத்தி தினேஷ் நடிக்கும் தண்டகாரண்யம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு அடைந்தது.
2012-ம் ஆண்டு அட்டகத்தி மூலம் இயக்குனராக அறிமுகமானார் பா.இரஞ்சித். இப்படத்தின் கதாநாயகனாக தினேஷ் நடித்திருந்தார். அதன் பின்னர் கார்த்தி நடிப்பில் மெட்ராஸ், ரஜினி நடிப்பில் கபாலி, காலா படங்களை இயக்கி இருந்தார். தொடர்ந்து சர்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார்.
இதனிடையே நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, சேத்துமான், பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களை பா.ரஞ்சித் தயாரித்து உள்ளார். அட்டக்கத்தி தினேஷ் நடித்திருந்த 2-ம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தை அதியன் ஆதிரை இயக்கினார்.
தற்போது பா.இரஞ்சித் மீண்டும் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் அதியன் ஆதிரை இயக்கும் புதிய படத்தை தயாரித்து வருகிறார். தண்டகாரண்யம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைக்கிறார். இந்நிலையில் தண்டகாரண்யம் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு அடைந்துள்ளதாக படக்குழு அறிவித்து, புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.