இந்தியில் தெறி ரீமேக் பேபி ஜான்… படப்பிடிப்பு மும்பையில் தீவிரம்…
தெறி படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகி வரும் பேபி ஜான் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோலிவுட் திரையுலகில் டாப் இயக்குநராக வலம் வருபவர் அட்லீ. ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் முதல் படத்திலேயே வெற்றி பெற்றார். தனது இரண்டாவது படத்திலேயே விஜய்யுடன் கூட்டணி அமைத்தார். அதன்படி, அட்லீ மற்றும் விஜய் கூட்டணியில் கடந்த கடந்த 2016-ம் ஆண்டு தமிழில் வௌியான திரைப்படம் தெறி. படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், ராஜேந்திரன், மகேந்திரன், ஐரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசை அமைத்திருந்தார். இப்படத்தில் நடிகர் விஜய் போலீசாக நடித்திருப்பார். இத்திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்தது.
அண்மையில் தெறி திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை தெறி படத்தை இயக்கிய அட்லீ தயாரிக்கிறார். இப்படத்தை கீ படத்தை இயக்கிய காலிஸ் இயக்குகிறார். படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், கீர்த்தி சுரேஷ், கதாநாயகியாக நடிக்கிறார். படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பாக பூஜையுடன் தொடங்கியது.
இந்நிலையில், பேபி ஜான் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்குள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் இப்படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. மேலும், படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரும், படத்தின் தயாரிப்பாளருமான அட்லீ பங்கேற்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.