வெள்ளித்திரையில் சக்திமான்… பட வெளியீட்டை முடிவு செய்த படக்குழு…
தூர்தர்ஷனில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த தொடர்களில் சக்திமான் தொடரும் ஒன்று. 90-களில் சிறுவர்களை மொத்தமாக கட்டிப்போட்ட சூப்பர் ஹீரோ தொடர் இது. இந்தி நடிகர் முகேஷ் கண்ணா, பண்டிட் கங்காதர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரே இந்த தொடரையும் தயாரித்து இருந்தார். இந்த தொடர் பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டும் ஒளிபரப்பப்பட்டது. முகேஷ் கன்னாடவுடன் வைஷ்ணவி, கிது கிட்வானி, டாம் அட்லர், லலித் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
சக்திமான் தொடர் கடந்த 1997-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை டிடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இத்தொடரின் சூப்பர் ஹீரோவான சக்திமான் இன்றைய வரையிலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், சக்திமான் தொடர் திரைப்படமாக உருவாக உள்ளது. கொரனாவால் ஏற்பட்ட பிரச்சனையால் படம் தடைபட்டு போனது. தற்போது மீண்டும் தயாரிப்பு பணியை கையில் எடுத்துள்ளனர்.
முதலில் இப்படத்தை பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்குவதாக கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது மலையாள இயக்குநரும், நடிகருமான பேசில் ஜோசப் இயக்குகிறார். படத்தில் சக்திமானாக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார். இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்குகிறது. டான் 3, சிங்கம் அகெய்ன் ஆகிய படங்களை முடித்த பிறகு, ரன்வீர் சிங் இப்படத்தில் இணைய உள்ளார். மேலும், சக்திமான் திரைப்படத்தை 2026-ம் ஆண்டு திரைக்கு கொண்டுவர படக்குழு முடிவு செய்துள்ளதாம்.