நடிகர் பரத் தமிழ் சினிமாவில் காதல், பாய்ஸ், பழனி போன்ற பல படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் இயக்குனர் முத்தையாவின் மகன் விஜய் முத்தையா நடித்துவரும் சுள்ளான் சேது படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. அதே சமயம் பரத்திற்கு சமீப காலமாக வெளியாகும் திரைப்படங்கள் எதுவும் சரியான வெற்றியைத் தரவில்லை.
இந்நிலையில் அடுத்ததாக பரத், காளிதாஸ் 2 எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் காளிதாஸ். திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படத்தில் பரத் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றது.
இதன் வெற்றியைத் தொடர்ந்து நான்கு வருடங்கள் கழித்து காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. காளிதாஸ் 2 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய ஸ்ரீ செந்தில் தான் இயக்குகிறார். இந்த படத்தை எஸ்கே பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சுரேஷ் பாலா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இதில் பரத்துடன் இணைந்து அஜய் கார்த்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று (ஜூன் 7ஆம் தேதி) பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.இந்த பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்ட நிலையில் படப்பிடிப்பையும் தொடங்கி வைத்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
- Advertisement -