நடிகை பாவனாவின் தி டோர் பட விமர்சனம்.
ஜெய் தேவ் இயக்கத்தில் ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருந்த தி டோர் திரைப்படம் இன்று (மார்ச் 28) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பாவனா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் இணைந்து கணேஷ் வெங்கட்ராமன், ஜெயபிரகாஷ், ஸ்ரீ ரஞ்சனி, நந்தகுமார், மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் நடிகை பாவனா கட்டிடக்கலை நிபுணராக நடித்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் நடிகை பாவனா அடுக்குமாடி குடியிருப்பை வடிவமைக்கிறார். அதற்கான கட்டிட பணிக்காக பழமையான கோவில் ஒன்று இடிக்கப்படுகிறது. அந்த கோயில் இடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் பாவனாவின் தந்தை விபத்தில் உயிரிழந்த விடுகிறார். இதன்பிறகு சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் தன்னுடைய பணியை தொடங்குகிறார் பாவனா. ஒரு கட்டத்தில் பாவனாவை சுற்றி சில அமானுஷ்யமான சம்பவங்கள் நடப்பதை உணர்ந்த பாவனா அதன் பின்னணி என்ன என்பதை தனது நண்பர்களுடன் இணைந்து கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். அப்போது அவர் சந்திக்கும் ஒவ்வொருவரும் இறந்து விடுகிறார்கள். இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை.
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார் பாவனா. அதிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்த நடித்துள்ளார். இந்த படம் ஹாரர் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான காட்சிகள் க்ரைம் திரில்லராகவே நகர்கிறது. அதாவது இந்த படத்தில் திகில் காட்சிகள் மிகவும் குறைவு. ஆனால் கதை நகர நகர சுவாரஸ்யம் அதிகரிக்கிறது. கணேஷ் வெங்கட்ராமன், ஸ்ரீ ரஞ்சனி, ஜெயபிரகாஷ், சங்கீதா, பிரியா வெங்கட் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்துள்ளனர். மேலும் ஒளிப்பதிவாளர் கௌதம் படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் மிக அழகாக காட்டியிருக்கிறார். வருண் உன்னியின் இசை சில இடங்களில் பயமுறுத்தினாலும் பல இடங்களில் வரும் அதிகமான இசை பார்வையாளர்களை எரிச்சலடைய வைக்கிறது. மேலும் தி டோர் என்ற டைட்டில் எதற்காக இந்த படத்திற்கு வைத்தார்கள் என்பதும் புரியவில்லை. அதாவது ஜெய் தேவ் இந்த படத்தை வழக்கமான திகில் கதையாக எடுத்திருந்தாலும் திகில் உணர்வு கொஞ்சம் கூட ஏற்படவில்லை. ஆனால் திரைக்கதையில் சுவாரஸ்யம் இருப்பதனால் இந்த படத்தை ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.