ப்ளூ ஸ்டார் பட நடிகர் ஒருவர், சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பராசக்தி. இந்த படத்தை இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்கி வருகிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இந்த படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். ரவி கே சந்திரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்த அவருடன் இணைந்து அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். கடந்த 1965 காலகட்டத்தில் நடந்த இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மதுரை, சிதம்பரம், காரைக்குடி போன்ற பகுதிகளில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்திருந்த பிரித்விராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. மேலும் நடிகர் பாண்டியராஜனின் மகனான பிரித்விராஜன், சிவகார்த்திகேயனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.