கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஜய் அரசியல் பயணம் தொடர்பாக ஏகப்பட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. விஜய் தன்னுடைய மக்கள் இயக்கம் மன்ற நிர்வாகிகளை சந்திப்பது, 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் முக்கிய நபர்களை தேர்ந்தெடுப்பது, தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசு வழங்குவது, தகுதி தூரம் வாக்காளர் பட்டியல்களை பார்வையிடுவது என அடுக்கடுக்காக அரசியல் செயல்பாடுகள் நீண்டு கொண்டிருக்கின்றன. எப்போதுமே பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாத தமிழக அரசியலில் நடிகர் விஜயின் என்ட்ரி முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது. பல அரசியல் கட்சித் தலைவர்களும் இதுகுறித்து பேசி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜயின் மக்கள் இயக்க மன்ற தலைவரான புஸ்ஸி ஆனந்த் மன்ற நிர்வாகிகளை தொடர்ச்சியாக சந்தித்து அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கியும், அமைப்பை மக்களிடம் கொண்டு சேர்ப்பது பற்றியும் செயலாற்றி வருகிறார்.
இதன் ஒரு கட்டமாக இன்று சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தினரின் மகளிர் கூட்டமைப்புடன் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை மேற்கொண்டார். அதில் பெண் நிர்வாகிகள் நாங்கள் விஜய்யை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு புஸ்ஸி ஆனந்த் இனிமேல், ‘தலைவரை விஜய் என்று அழைக்கக் கூடாது தளபதி என்றுதான் அழைக்க வேண்டும்’ என்றும் அறிவுரை கூறியுள்ளார்.