இயக்குனர் சந்தூ மொண்டேட்டி, நடிகர் சூர்யா குறித்து பேசி உள்ளார்.
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரது நடிப்பில் கடைசியாக கங்குவா திரைப்படம் வெளியான நிலையில் அடுத்தது ரெட்ரோ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் நடிகர் சூர்யா, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் வெற்றிமாறன், வெங்கி அட்லூரி, பசில் ஜோசப் ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில்தான் கார்த்திகேயா, தண்டேல் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இயக்குனர் சந்தூ மொண்டேட்டி, அடுத்தது சூர்யாவை வைத்து படம் பண்ண போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் சூர்யாவிடம் இரண்டு கதைகளை சொன்னதாகவும் அதில் ஏதேனும் ஒரு கதையை நடிகர் சூர்யா தேர்வு செய்த பின்னர் இந்த படம் தொடங்கும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் சூர்யா நடிப்பில் தான் இயக்கப் போகும் படம் குறித்து பேசி உள்ளார் சந்தூ மொண்டேட்டி. அதன்படி அவர் பேசியதாவது, “இது வாழ்க்கையை விட பெரிய கதை. நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாக இருக்கும். இந்த கதையில் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. சூர்யா போன்ற நடிகரால் மட்டுமே இந்த கதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும்” என்று தெரிவித்துள்ளார்.