Homeசெய்திகள்சினிமாஎன்ன கொடுமை சார் இது?.... 'சந்திரமுகி 2' விமர்சனம்!

என்ன கொடுமை சார் இது?…. ‘சந்திரமுகி 2’ விமர்சனம்!

-

- Advertisement -

சந்திரமுகி 2 திரைப்படம் இன்று தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது. பி வாசு இயக்கத்தில் 17 வருடங்கள் கழித்து சந்திரமுகி இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ரஜினி ஜோதிகா கூட்டணியில் வெளியான சந்திரமுகி படம் கிடைத்த வரவேற்பு சந்திரமுகி 2 திரைப்படத்திற்கும் கிடைத்துள்ளதா என்பதை பார்ப்போம்.

படத்தின் ஆரம்பத்தில் ரங்கநாயகியாக நடித்துள்ள ராதிகா குடும்பத்தில் பல துரதிஷ்டவசமான சம்பவங்கள் நடக்கின்றன. ஒரு கட்டத்தில் ராதிகாவின் இளைய மகளான லட்சுமிமேனன் விபத்தில் சிக்கி அவரால் நடக்க முடியாமல் போகிறது. மூத்த மகளோ வேறொரு மதத்தை சார்ந்த வரை திருமணம் செய்து கொண்டதால் ரங்கநாயகி குடும்பத்தினர் அவரை அவர்களை ஒதுக்கி வைக்கின்றனர். இந்நிலையில் தான் பல சம்பவங்கள் நடக்க குலதெய்வத்தை மறந்து போனதால் தான் இது மாதிரியான சம்பவங்கள் நடப்பதாக சாமியார் ஒருவர் கூறுகிறார். அதனால் அகநாயகி குடும்பத்தினர் அனைவரும் சந்திரமுகி அரண்மனை இருக்கும் ஊருக்கு செல்கின்றனர். மூத்த மகளின் குழந்தைகளையும் அழைத்துச் செல்ல அவருக்கு பாதுகாவலனாக பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராகவா லாரன்ஸ் உடன் செல்கிறார். அங்கு சந்திரமுகி அரண்மனையில் முதல் பாகத்தில் நடித்த வடிவேலு முருகேசன் கதாபாத்திரத்தில் அரண்மனை ஓனராக இருக்கிறார். ரங்கநாயகி குடும்பத்தினர் குலதெய்வ கோயிலில் பூஜை செய்ய விடாமல் ஒரிஜினல் சந்திரமுகையான கங்கனா ரனாவத் இருக்கிறார். இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை சந்திரமுகி 2 படத்தின் மீதி கதையாகும்.

கதாநாயகனாக நடித்துள்ள ராகவா லாரன்ஸ் ஆக்சன் காட்சிகளில் ஸ்கோர் செய்திருந்தாலும் அப்படியே ரஜினியை காப்பி அடித்திருக்கிறார். கங்கனா தனது நடிப்பாலும் நடனத்தாலும் அனைவரையும் கவர்கிறார். இதில், ராதிகா மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி, ஒய் ஜி மகேந்திரன் உள்ளிட்டோருக்கு இதில் என்ன வேலை என்பதே தெரியவில்லை. லட்சுமிமேனன் ஓரளவிற்கு தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மறைந்த நடிகர்களான மனோபாலா, ஆர் எஸ் சிவாஜி உள்ளிட்டோர் சரியாக பயன்படுத்தப்படவில்லை. முதல் பாகத்தில் வடிவேலுவின் காமெடி படத்திற்கு ஹைலைட்டாக அமைந்திருந்தது. ஆனால் இரண்டாம் பாகத்தில் கொஞ்சம் கூட ஒத்துப் போகவில்லை. அதிலும் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இருவரும் காமெடி என்ற பெயரில் செய்வது ஏன்டா இப்படி பண்றீங்க என்பது போல் சிரிப்புக்கு மேல் அழுகையை தான் வரவழைக்கின்றன.

நான்கு ஐந்து பாடல்கள் படத்தில் இடம்பெற்று இருந்தாலும் ஒரு பாடலில் கூட பின்னணி இசை கை கொடுக்கவில்லை. இருந்தபோதிலும் தனது இசையால் தூக்கி நிறுத்த ஆஸ்கர் விருது பெற்ற எம் எம் கீரவாணி முயற்சித்துள்ளார். ஆர் டி ராஜசேகரின் ஒளிப்பதிவு சிறப்பு. மொத்தத்தில் அரைத்த மாவையே தான் அரைத்து இருக்கிறார்கள். இயக்குனர் பி வாசு கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்.

MUST READ