மணிகண்டன் தற்போது தமிழ் சினிமாவின் நம்பிக்கையான நடிகராக உருவெடுத்துள்ளார். காதலும் கடந்துபோகும், விக்ரம் வேதா மற்றும் ஜெய் பீம் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவின் நம்பிக்கை நடிகர் ஆகியுள்ளார் மணிகண்டன்.
இந்நிலையில் அவர் குட்நைட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் மே 12-ம் தேதி வெளியாக உள்ளது. எனவே அதற்கான ப்ரோமோஷனில் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார். அதற்காக விஜய் டிவியில் நடைபெறும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் பல நடிகர்களின் குரலில் மிமிக்ரி செய்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவைப் பகிர்ந்த பாடகி சின்மயி மணிகண்டனைப் புகழ்ந்துள்ளார்.
“மணிகண்டனிடம் இன்னும் எவ்வளவோ திறமைகள் இருக்கிறது. அவர் கொண்டாடப்பட வேண்டியவர்.
சிறு கதை:
10 ஆண்டுகளுக்கு முன்பு, எனது நிறுவனமான ப்ளூ எலிஃபென்ட், தேர்தல் ஆணையத்திற்கான பயிற்சி வீடியோக்களை மொழிபெயர்த்து டப்பிங் செய்து கொண்டிருந்தது.
மிகவும் நெருக்கடியான காலக்கெடு மற்றும் ஏராளமான வேலைப்பளு காரணமாக நாங்கள் 2 வாரங்கள் தொடர்ந்து தூங்காமல் வேலை செய்தோம்.
நான் உடன் பணிபுரிய பாக்கியம் பெற்ற 3 பேரில் மணியும் ஒருவர். ஒரு வயதான பஞ்சாபி ஜென்டில்மேன் உட்பட அந்த பயிற்சி வீடியோவில் உள்ள பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு மணிகண்டனே குரல் கொடுத்தார். தூக்கமில்லாத வேலை நேரம், காலக்கெடுவைத் துரத்தி ஓடிக்கொண்டிருந்த நிலையில் மணிகண்டன் தான் எங்களை மகிழ்ச்சியாக வைத்திருந்தார்.” என்று தெரிவித்திருந்தார்.