அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி பாராட்டுகளை பெற்ற சித்தா திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். அவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சித்தா. இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ் யு அருண்குமார் இயக்கியுள்ளார். சித்தார்த்தின் எட்டாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்திருந்தார்.
இதில் சித்தார்த்துடன் இணைந்து நிமிஷா சஜயன் நடித்துள்ளார். குழந்தை கடத்தல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவான இந்த படம் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்தே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. கமல்ஹாசன் உட்பட பலரும் சித்தா பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சித்தா திரைப்படம் நவம்பர் 17-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தேதி ஒத்திவைக்கப்பட்டது
இந்நிலையில், இன்று சித்தா திரைப்படம் பிரபல ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது. இப்படத்தை பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு பாராட்டி வருகின்றனர். சித்தா படத்தைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் நடிகர் சித்தார்த் நடித்து வருகிறார். இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.