சியான் விக்ரமின் பிறந்த நாள் இன்று.
ஆரம்பத்தில் டப்பிங் கலைஞனாக இருந்து இன்று உச்ச நட்சத்திர நாயகனாக உயர்ந்திருப்பவர் சியான் விக்ரம். ரிஸ்க் எடுப்பதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்பது போல ஒவ்வொரு படத்திலும் தன் உடலை வருத்தி நடிப்பவர். தொலைக்காட்சி தொடரின் மூலம் கேமராவின் முன் நடிக்க தொடங்கியவர், அதைத்தொடர்ந்து சில படங்களில் நாயகனாக நடித்தார். ஆனால் அவை பெரிதளவு கவனம் பெறவில்லை. உறுமீன் வரும் வரை காத்திருந்த கொக்கு போல சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்த விக்ரமுக்கு 1999ல் பாலா இயக்கத்தில் வெளியான சேது திரைப்படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது. அதைத்தொடர்ந்து தில்,தூள்,காசி, ஜெமினி, பிதாமகன் என தொட்டதெல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட் தான். ஒவ்வொரு படத்திற்கும் தன்னுடைய லுக்கை வேறுபடுத்தி காட்ட பல மணி நேரம் ஜிம்மில் செலவழித்து உடலை உருக்கி தன்னைத்தானே மாற்றிக் கொள்ளும் உன்னத கலைஞன் விக்ரம். நகைச்சுவை, ஆக்சன், சென்டிமென்ட் என களம் எதுவானாலும் ஆட்டநாயகனாக அடித்து நொறுக்கும் அசாத்திய நடிகன். விக்ரமுக்கு வயது ஏற ஏற அவருடைய நடிப்பு மெருகேறி கொண்டே போகிறது. அந்த அளவிற்கு இவருடைய தனித்துவமான நடிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது. இவர் நடிப்பில் உருவாக்கியுள்ள துருவ நட்சத்திரம், தங்கலான் போன்ற திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. குறிப்பாக தங்கலான் திரைப்படத்தில் வேறொரு பரிமாணத்தில் நடித்துள்ளார். இந்த கெட்டப்பும் விக்ரமுக்கு நல்ல பெயரை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதைத்தொடர்ந்து விக்ரம், தனது 62 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் விக்ரம் தனது 58 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் நாமும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்வோம்.