தமிழ் சினிமாவை மாறுபட்ட கோணத்தில் திரையில் காட்டும் தவிர்க்க முடியாத இயக்குநர் பா ரஞ்சித். அட்டகத்தி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தடம் பதித்த பா ரஞ்சித், முதல் படத்திலேயே வெற்றி கண்டார். இதை தொடர்ந்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். ஒரு மதில் சுவரும், அதை சுற்றி நடக்கும் அரசியலையும் அசராமல் திரையில் காட்டி ரசிகர்களை அசரடித்தார். இதையடுத்து, ரஜினியை வைத்து காலா மற்றும் கபாலி ஆகிய பிளாக் பஸ்டர் திரைப்படங்களை எடுத்தார். இயக்கம் மட்டுமன்றி தயாரிப்பிலும் பா ரஞ்சித் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார். கோலார் சுரங்கத்தில் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளா மையமாகக் கொண்டு தங்கலான் திரைப்படத்தின் கதை அமைந்துள்ளது.
இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது. படத்தில் தனக்கு குறைவான வசனங்களே உள்ளதாகவும், டப்பிங் பணிகளை கடந்த மாதமே முடித்ததாகவும் விக்ரம் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று படத்தின் டப்பிங் பேட்ச் வொர்க் பணிகள் நடந்ததாக படக்குழு உடனான புகைப்படத்துடன் விக்ரம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.