சினிமாவில் பணியாற்றும் நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள் என ஒவ்வொருக்கும் கேமராவிற்கு முன் ஒரு வாழ்க்கையும் கேமராவிற்கு பின் ஒரு வாழ்க்கையும் இருக்கிறது. அதன்படி தான் எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவரது வாழ்வில் பிரச்சனை என்பது இருக்கும். அது போல தான் கணவன் – மனைவி உறவிலும் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து வரை செல்கிறது. ஆனால் கடந்த சில வருடங்களாக திரை பிரபலங்களின் தொடர் விவாகரத்து தகவல்கள் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் தனுஷ், ஜெயம் ரவி, ஏ.ஆர். ரகுமான் போன்ற முக்கிய பிரபலங்களின் விவாகரத்துகள் இன்றுவரையிலும் ஜீரணிக்க முடியாததாகவும் நம்ப முடியாததாகவும் இருக்கிறது.
முன்பெல்லாம் யாருக்காவது விவாகரத்து ஆகிவிட்டது என்ற செய்தி நம் காதில் விழுந்தாலே இனம் புரியாத வலி ஒன்று மனதில் எழும். குறிப்பாக உச்ச நட்சத்திரங்கள் சிலர் மண வாழ்வை முறித்துக் கொண்டு விவாகரத்து செய்தால் அதை மிகுந்த வருத்தத்தோடு அணுகினார்கள் ரசிகர்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அடிக்கடி பல உச்ச நட்சத்திரங்கள் விவாகரத்து செய்து கொண்டதாக வரும் செய்தி வாடிக்கையாகிவிட்டது. அதிலும் தற்போது சமூக வலைதளங்களில் அடுத்து இந்த நடிகர்தான் விவாகரத்து செய்யப் போகிறார் என்று கணித்து சொல்லும் அளவிற்கு பிரபலங்களின் விவாகரத்து பிரச்சனைகள் ட்ரண்டாகிவிட்டது. எனவே ஒரு நடிகரை மிக தீவிரமாக பின்பற்றும் ரசிகர்கள் இந்த கலாச்சாரத்தையும் ஏற்றுக்கொண்டு விவாகரத்து என்பதன் விளைவுகளை அறியாமலேயே தவறான முடிவை எடுக்கிறார்கள். விவாகரத்து என்பது இன்றைய ஃபேஷன் காலப்போக்கில் ஒரு கலாச்சார சீரழிவாக மாறிவிடுமோ என்ற சந்தேகத்தையும் எழுப்பி உள்ளது. அதாவது வெகுவாக வாழ்க்கையின் நிறை குறைகளை ஆராய்ந்து அதை சரி செய்ய முயலாமல் சட்டென்று விவாகரத்து தான் எளிதான முடிவு என்பது போன்ற பொய் பிம்பத்தையும் நடிகர்களின் இத்தகைய செயல் மக்களிடையே ஏற்படுத்துகிறது. பொதுவாகவே நடிகர்கள் பொருளாதார ரீதியாக மேம்பட்ட நிலையில் இருக்கும் பொழுது அவர்களுக்கு இந்த முடிவு எளிதாகிப் போகிறது. ஆனால் தினக் கூலி வேலைக்கு சென்று வரும் ரசிகன் ஒருவன் இது போன்ற தவறான முடிவை எடுத்தால் அவனது வாழ்வில் எத்தனை பிரச்சனைகளை எல்லாம் சந்திக்க நேரிடும் என்பதை ஒரு நிமிடம் கூட யோசித்துப் பார்ப்பது கிடையாது. “என் தலைவனே விவாகரத்து செய்துவிட்டார். நான் செய்தால் என்ன தவறு?” என்பது போன்ற எண்ணங்கள்தான் ரசிகர்கள் மனதில் தோன்றும்.
அந்த அளவிற்கு திரைப்பிரபலங்களின் இது போன்ற தொடர் விவாகரத்து செயல்கள் பொதுமக்களிடையே ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி நடிகர்களின் விவாகரத்து பிரச்சனைகள் தான் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாத பொருளாக மாறுகிறது. ஒரு நடிகருக்கு விவாகரத்து என்ற செய்தி வந்தவுடன் மீடியாக்களுக்கு மட்டுமல்லாமல் நெட்டிசன்களுக்கும் இறக்கை முளைத்து விடுகிறது. இவர்களின் விவாகரத்திற்கு அவர்தான் காரணம் என்று ஒரு பக்கம் கமெண்ட் வர, மற்றொரு பக்கம் நீங்கள் இருவரும் எங்களுக்காக சேர்ந்து வாழ வேண்டும் என்று மற்றுமொரு கமெண்ட் வரும்.
அதாவது ஒரு நடிகன் திரைப்படங்களில் நடித்து எப்படி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறானோ அதுபோல ரசிகர்களை நல்வழிப்படுத்தும் கட்டாயமும் நடிகர்களுக்கு இருக்கிறது. அதேபோல் ரசிகர்களும் தனுஷ், ஜெயம் ரவி போன்ற நடிகர்களை மட்டுமே பின்பற்றி தன் வாழ்க்கையில் சில தவறான முடிவுகளை எடுக்காமல் சூர்யா, அஜித், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களையும் உதாரணமாக எடுத்துக் கொண்டால் சமூகத்தில் விவாகரத்து போன்ற பிரச்சனைகளையும் களைய முடியும்.திரையில் வரும் நடிகர், நடிகைகள் வெறும் பணம், புகழ் மட்டும் சம்பாதிக்க வந்தவர்கள் அல்ல. அவர்களை பின்பற்றும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக வாழ கடமைப்பட்டவர்கள். அவர்களின் சிறு சிறு அசைவுகள் கூட சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால், நடிகர்களின் சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் ரசிகனின் வாழ்க்கையிலும் சிக்கலை உருவாக்குகிறது. என் வாழ்கை வேறானது என் தலைவனின் வாழ்க்கை வேறானது என்கிற புரிதல் இன்னும் ரசிகனிடம் வரவில்லை. எனவே நடிகர்கள், தலைவர்கள் வாழ்க்கை என்பது அவர்களுக்கானது மட்டும் கிடையாது. சமுதாயத்தையும் கவனத்தில் கொண்டு அவர்கள் வாழ வேண்டும்.