இயக்குநர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா இருவரும் காதலித்து கடந்த 2022 ஜூன் 9ஆம் தேதி கரம் பிடித்தனர். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இத்திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமையை நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. அதனை இயக்கும் பணிகளை கெளதம் மேனன் மேற்கொண்டிருந்தார்.
இது ‘நயன்தாரா; பியாண்ட் தி ஃபேரி டேல்’என்ற பெயரில் நீண்ட காலமாக உருவாகி வந்தது. இந்த ஆவணப்படம் நயன்தாராவின் திருமணம் அல்லாது அவரது வாழ்க்கை பயணத்தையும் விவரிப்பதாகவும் இருப்பதாக கூறப்பட்டது. இந்த ஆவணப்படம் வருகிற 18ஆம் தேதி நயன்தாராவின் பிறந்தாளன்று நெட் ஃபிளிக்ஸில் வெளியாகவிருந்தது. இதையொட்டி படத்தின் ப்ரொமோ தொடர்ச்சியாக அடுத்தடுத்து சமீபத்தில் வெளியானது. அதில் ஒரு ப்ரொமோவில் நானும் ரௌடி தான் படத்தில் இடம்பெற்ற காட்சிகளும், பாடல்களும் மூன்று விநாடி இடம்பெற்றிருந்தன.
இதையடுத்து நானும் ரௌடி தான் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் படத்தின் பாடலையும், காட்சியையும் தன்னிடம் அனுமதி கேட்காமல் வீடியோவில் பயன்படுத்தியதாகக் கூறி 3 விநாடிக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனை நயன்தாராவே தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்து, நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் தனுஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அந்த அறிக்கையில், “தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் மட்டுமின்றி ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பங்காற்றிய ஒவ்வொருவரும் வெகுவாக பாதிப்படைந்திருக்கிறோம். உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம். எங்கள் எல்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு, ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம்.
தடையில்லா சான்றிதழ் மறுக்கப்பட்டது வியாபார ரீதியானதாகவோ அல்லது சட்ட ரீதியானதாகவோ இருந்தால் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், முழுக்க முழுக்க என் மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான, உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?” எனக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், எதிராக நயன்தாரா வெளியிட்ட அறிக்கைக்கு நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், அனுபாமா பரமேஸ்வரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்ருதி ஹாசன், பார்வதி, கவுரி, நஸ்ரியா, ரியா ஷிபு, மஞ்சிமா மோகன், அஞ்சு குரியன் உள்ளிட்ட பல நடிகைகள் லைக் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தனுஷுடன் நடித்தவர்கள். ஏற்கெனவே நடிகர் தனுஷ் பல நடிகர்- நடிகைகளின் விவகாரத்துக்கு காரணமாக இருந்துள்ளார் எனக் கூறப்படும் நிலையில் அவருடன் நடித்த நடிகைகள் அவருக்கு எதிராக லைக் செய்துள்ளதன் பின்னணியை ஆராய்ந்தால் பல அநியாயங்கள் வெளிப்படும் என்றே கட்டியங்கள் கூறுகின்றன.