நடிகர் சதீஷ் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கியவர். அந்த வகையில் சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அடுத்ததாக ஹீரோவாகவும் களமிறங்கி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சதீஷ் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் வித்தைக்காரன். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையில் நாய் சேகர், கான்ஜுரிங் கண்ணப்பன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அதிலும் கான்ஜுரிங் கண்ணப்பன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. படத்தில் இடம்பெற்ற காமெடிகளும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இந்த படத்தில் சதீஷ் உடன் இணைந்து ரெஜினா, சரண்யா பொன்வண்ணன், நாசர், ஆனந்தராஜ், விடிவி கணேஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். செல்வின் ராஜ் சேவியர் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இதன் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கான்ஜுரிங் கண்ணப்பன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. தற்போது இந்த படத்தின் வேலைகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அப்டேட்களும் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில்
வெளியாகும் என்று நம்பப்படுகிறது.