Homeசெய்திகள்சினிமாதேவாலயத்திற்கு தங்க கிரீடம் வழங்கிய சுரேஷ் கோபி .. தங்கமா? செம்பா? என புதிய சர்ச்சை... தேவாலயத்திற்கு தங்க கிரீடம் வழங்கிய சுரேஷ் கோபி .. தங்கமா? செம்பா? என புதிய சர்ச்சை…
மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சுரேஷ் கோபி. 80-களில் தொடங்கிய இவரது திரைப்பயணம் இன்று வரை சென்று கொண்டிருக்கிறது. மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் அவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அஜித்துடன் தீனா, சமஸ்தானம், ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வௌியான ஐ படத்தில் இவர் வில்லனாக நடித்திருப்பார். அப்படத்தில் இவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது. ஆக்ஷன் ஹீரோவாக மலையாளத்தில் பல படங்களிலும், குணச்சித்திர நடிகராகவும் நடித்திருக்கிறார். தனக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்டவர் சுரேஷ் கோபி.
அண்மையில் இவரது மகளுக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். 65 வயதாகும் இவர் கடந்த சில வருடங்களாக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அவர் பல முக்கிய அரசியல் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திருச்சூர் மக்களவைத் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி போட்டி இடுகிறார். இந்நிலையில், நடிகர் சுரேஷ் கோபி, தனது மனைவி ராதிகாவுடன் சேர்ந்து கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தேவாலயத்திற்கு தங்க கிரீடத்தை வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
அன்னை மரியாவின் சிலைக்கு வழங்கப்பட்ட கிரீடம் செம்பு பூசப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால், இது தங்கமா அல்லது செம்பா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. கிறிஸ்துவ சமூகத்தினரின் வாக்குகளைப் பெறவே சுரேஷ் கோபி தனது லாபத்திற்காக இந்த கிரீடத்தை வழங்கி இருப்பதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதே சமயம், தங்கத்தின் தூய்மையை அளவிடவும் வலியுறுத்தி வருகின்றனர்.