குழந்தைகள் கடத்திக் கொள்ளப்பட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள செக்டார் 36 திரைப்படத்தைப் பற்றிய ஓர் அலசல்.வேலை தேடி பிற பகுதிகளில் இருந்து டெல்லிக்கு குடியேறும் மக்கள் வாழும் பகுதியில் அடிக்கடி குழந்தைகள் காணாமல் போகும் சம்பவம் நடைபெறுகிறது. இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படுகிறது. அதன்பின் நடைபெறும் விசாரணையும் தொடர்ந்து நடைபெறும், நெஞ்சை பதைபதைக்க வைக்கும் கொடூரமான சம்பவங்களும் தான் ஹைலைட். உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் 2006 காலகட்டத்தில் ஒரு பெரிய தொழிலதிபரும் அவருடைய வேலையாளும் சேர்ந்து 17 பேரை கடத்தி கொலை செய்கின்றனர். அவர்களின் சடலத்தை தொழிலதிபரின் வீட்டிலேயே புதைத்தும் வைக்கின்றனர். பின்னர் சிபிஐ இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கும் போது கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் என்றும் அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பதும் கண்டறியப்படுகிறது. கொடூரத்தின் உச்சமாக தொழிலதிபரின் வேலையால் மனித மாமிசத்தை உண்ணும் பழக்கம் உடையவர் என்பதும் நெஞ்சை பதற செய்கிறது. கதையாக கேட்கும் பொழுதே பதற வைக்கும் இந்தக் கதையை அதே பதட்டத்துடன்
நமக்கு கடத்தும் படி திரை வடிவில் படமாக்கி உள்ளனர் படக்குழுவினர். விக்ராந்த் மெசி, தீபக் டொப்ரியல், ஆகாஷ் குரானா ஆகியோர் நடிப்பில் மிரட்டி உள்ளனர். கொடூரமாக ரத்தம் தெறிக்கும் காட்சிகளை மிகத் தத்ரூபமாக படமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் சௌரப் கோஸ்வாமி. இவை அனைத்தையும் ஒரு சேர வழி நடத்தி தரமான க்ரைம் திரில்லர் படமாக இயக்கியுள்ளார் ஆதித்யா நிம்பால்கர். படத்தின் இறுதியில் இது உண்மையில் நடைபெற்ற சம்பவமா அல்லது வெறும் கட்டுக்கதையா என்பது போன்ற ஒரு குழப்பமான நிலையில் படத்தை முடிப்பது பார்வையாளர்களை சற்று குழப்பும் விதமாக அமைந்துவிட்டது. இருப்பினும் ரத்தம் தெறிக்கும் ராவான மேக்கிங் சம்பவங்களை நேரில் பார்ப்பது போன்ற ஓர் படபடப்பை கொடுக்கிறது. நிச்சயம் ஒரு தரமான க்ரைம் திரில்லர் படமாக இப்படம் இருக்கிறது என்பதில் ஐயமில்லை.