தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்தவர் நடிகர் டெல்லி கணேஷ். இவர் கடந்த 1976 ஆம் ஆண்டு பட்டினப் பிரவேசம் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் நடிகராக அறிமுகமானார். மலைத்தொடர்ந்து அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி போன்ற படங்களில் நடித்திருந்த டெல்லி கணேஷ் கடைசியாக சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்து வந்தவர். அடுத்தது இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பெயர் பெற்றுள்ளார். இந்நிலையில் தான் இவர் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். எனவே டெல்லி கணேஷ், நவம்பர் 10ஆம் தேதி (நேற்று) வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவிற்கு கமல்ஹாசன், விஜய் போன்ற திரைப் பிரபலங்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வந்தனர். மேலும் பலர் நேரில் சென்று டெல்லி கணேஷ் உடலுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் இன்று (நவம்பர் 11) டெல்லி கணேஷின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நெசப்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் டெல்லி கணேஷ் திரைத்துறையில் நுழைவதற்கு முன்பாக இந்திய விமானப்படை அதிகாரியாக பணிபுரிந்ததன் காரணமாக இந்திய விமானப்படை சார்பில் அவரது உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.