ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவரா படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாக இருக்கிறது.
நடிகர் ஜூனியர் என்டிஆர், டோலிட்டில் மட்டுமல்லாமல் கோலிவுட்டிலும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். இவர் கடைசியாக ராம்சரணுடன் இணைந்து ஆர் ஆர் ஆர் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூலிலும் பட்டய கிளப்பியது. அதைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர், கொரட்டலா சிவா இயக்கத்தில் தேவரா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. தேவரா பாகம் 1 படத்தில் ஜூனியர் என்டிஆர் -க்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க வில்லனாக சைஃப் அலிகான் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை நந்தமுரி தரகா ராமாராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் யுவசுதா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். ரத்னவேலு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் இறுதி கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதாவது இப்படமானது வருகின்ற செப்டம்பர் 27 அன்று உலகம் முழுவதும் திரையிடப்பட முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவும் அதைத்தொடர்ந்து முதல் பாடலும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது. அடுத்ததாக இந்த படத்தின் இரண்டாவது பாடல் இன்று (ஆகஸ்ட் 5) மாலை 5.04 மணி அளவில் வெளியாகும் என பட குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். மேலும் இந்த பாடலானது ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் ஆகிய இருவருக்குமான காதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.