டெவில் படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு
- Advertisement -
இயக்குநர் மிஷ்கின் இசை அமைப்பாளராக அறிமுகமாகி இருக்கும் டெவில் படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் மாறுபட்ட இயக்குநர் மிஷ்கின். அவரது திரைக்கதை அமைப்பும், வசனங்களும், திரை கண்ணோட்டமும் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இருக்கும், திரைப்படங்களை காவியமாக பார்க்கும் அழகியல் அவரிடம் உள்ளது. காதல், காமெடி என வெறும் கமர்ஷியல் படங்களை இயக்காமல் தனக்கென தனி ஸ்டைலில் ராவாக படம் இயக்குவதில் வல்லவர் இயக்குநர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, சைக்கோ, பிசாசு ஆகிய வெற்றிப்படங்களை இயக்கி இருக்கிறார்.

பிசாசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து பிசாசு 2-ம் பாகம் இயக்கி இருக்கிறார். அதில், ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி, விஜய் சேதுபதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இயக்குனராக இருக்கும் இவர் தற்போது நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். மாவீரன், லியோ உள்ளிட்ட படங்களில் மிஷ்கின் வில்லனாக நடித்து மிரட்டினார்.
தற்போது இயக்கம், நடிப்பை தாண்டி இசை அமைப்பாளராக அவர் அறிமுகம் ஆகியுள்ளார். அவரது சகோதரர் ஜிஆர் ஆதித்யா தற்போது ‘டெவில்’ எனும் படத்தை இயக்கி உள்ளார். இதில், விதார்த், பூர்ணா, ஆதித் அருண் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநர் மிஷ்கின் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். இப்படத்திலிருந்து புதிய பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், டெவில் திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வெளியாகிறது.