Homeசெய்திகள்சினிமாஇந்தியன் புரூஸ்லி தனுஷின் பிறந்தநாள் ஸ்பெஷல்!

இந்தியன் புரூஸ்லி தனுஷின் பிறந்தநாள் ஸ்பெஷல்!

-

நடிகர் தனுஷின் 40 வது பிறந்தநாள் இன்று.

நடிகர் தனுஷ் தனது திறமையையும் நம்பிக்கையும் வைத்து ஒரு ஸ்டார் நடிகராக முன்னேறி இருக்கிறார். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் தனுஷ். தொடக்கத்தில் நடிப்பின் மீது ஆர்வம் இல்லாமல் இருந்த தனுஷ் தந்தையின் கட்டாயத்தால் தமிழ் சினிமாவில் நுழைந்தார். தற்போது ஒரு தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவர் இன்றைய காலகட்டத்தில் பல இளைஞர்களுக்கு நம்பிக்கை நாயகனாக விளங்குகிறார்.

நடிகர் தனுஷ் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இந்த படத்தை தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா தயாரிக்க அண்ணன் செல்வராகவன் இயக்கியிருந்தார். முதல் படத்தில் தனுஷுக்கும் நடிப்புக்கும் ஒத்துப் போகவில்லை என்று பலரும் கமெண்ட் செய்து வந்தனர்.

ஆனால் அதன் பின் 2003 இல் வெளியான காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்தார். அதைத் தொடர்ந்து வெளியான திருடா திருடி என்ற படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடலின் மூலம் தான் நடனத்திலும் வல்லமை பெற்றவர் என்பதை வெளி காட்டினார். மேலும் சில படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் தொடர்ந்து தனது தன்னம்பிக்கையை கைவிடாமல் தன்னம்பிக்கையின் உருவமாக மாறி முக்கியமான பல வெற்றி படங்களை கொடுத்தார்.

அந்த வகையில் புதுப்பேட்டை, பொல்லாதவன், மயக்கம் என்ன, தங்கமகன் வேலையில்லா பட்டதாரி, வடசென்னை, அசுரன், கர்ணன் உள்ளிட்ட படங்களில் வெவ்வேறு பரிமாணங்களில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். குறிப்பாக அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார்.

பாலிவுட்டில் ராஞ்சனா படத்தின் மூலம் அறிமுகமாகி இந்தியா முழுக்க தனக்கென ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார். தமிழ், இந்தி மட்டுமில்லாமல் ஆங்கிலம், ப்ரெஞ்ச் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர் (தமிழில் – பக்கிரி), தி அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கிய ருசோ பிரதர்ஸ் இயக்கத்தில் “தி கிரே மேன் ” படத்தில் நடித்திருந்தார். இவ்வாறாக எல்லைகள் கடந்து சாதனை படைத்தவர்.

இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் எழுத்தாசிரியர், பாடல் ஆசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமைகளை உடையவர்.
அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு வெளியான ப. பாண்டி திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது தனது 50வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார்.

மேலும் காலா, விசாரணை, காக்கா முட்டை, வடசென்னை உள்ளிட்ட சமூக அரசியல் குறித்து பேசக்கூடிய படங்களை தயாரித்துள்ளார்.அதுமட்டுமில்லாமல் ஒய் திஸ் கொலவெறி முதல் பல பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அதாவது குத்து பாடலை பாடும் போது அனைவரையும் குத்தாட்டம் போட வைப்பார்.அம்மா சென்டிமென்ட் பாடலை பாடி அனைவரையும் உருக வைப்பார். இவ்வாறாக பல உணர்வுபூர்வமான பாடல்களை கொடுத்த வசீகர குரலுக்கு சொந்தக்காரர்.

சினிமாவின் பல தளங்களிலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள நடிகர் தனுஷை கலைத்துறையின் அசுரன் என்றாலும் திரைதுறையின் தங்கமகன் என்றாலும் மிகையாகாது.

இவ்வாறு திறமை மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் சோதனைகளை சாதனையாக மாற்றி சாதித்துக் கொண்டிருக்கும் இந்தியன் புரூஸ்லி என்று அழைக்கப்படும் தனுஷிற்கு நாமும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்வோம்.

MUST READ