நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் திரைவிமர்சனம்.
தனுஷ் இயக்கத்தில் பவிஷ், அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்து இன்று (பிப்ரவரி 21) உலகம் முழுவதும் வெளியாகி உள்ள படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.
இந்த படத்தின் ஆரம்பத்தில் பிரேக் அப் பாடலுடன் படத்தின் ஹீரோ பவிஷ் (பிரபு) என்ட்ரி கொடுக்கிறார். எனவே காதல் தோல்வியில் சிக்கித் தவிக்கும் பவிஷுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார்கள் அவரது பெற்றோர் ஆடுகளம் நரேன் – சரண்யா பொன்வண்ணன். அப்போது பவிஷின் பள்ளி தோழி பிரியா வாரியரை மணப்பெண்ணாக பார்க்கின்றனர். இருவரும் பேசி பழக கால அவகாசம் கேட்கும் நிலையில் கதாநாயகன் பவிஷ், பிரியா வாரியரிடம் தனது கடந்த கால காதல் வாழ்க்கையை பற்றி கூறுகிறார். அதாவது பணக்கார வீட்டுப் பெண்ணான அனிகாவின் அப்பா சரத்குமார் தான் இவர்களின் காதலுக்கு வில்லனாக இருக்கிறார்.
அங்கிருந்து பிரச்சினை தொடங்க சில நாட்களில் பவிஷ் – அனிகாவிற்கு பிரேக்கப் ஆகிவிடுவதாக பிரியா வாரியாரிடம் தன்னுடைய காதல் தோல்வி குறித்து சொல்கிறார் பவிஷ். அதேசமயம் பவிஷுக்கு, தன்னுடைய முன்னாள் காதலி (நிலா) அனிகாவின் திருமண அழைப்பிதழ் கிடைக்கிறது. இதனால் பிரியா வாரியர் அந்த திருமணத்திற்கு செல்லும்படி கூறுகிறார். நிலா மனம் மாறினால் நிலாவுடன் வாழ்க்கை இல்லையென்றால் பிரியா வாரியருடன் வாழ்க்கை என்ற முடிவில் திருமணத்திற்கு செல்கிறார் பவிஷ். அதன்பிறகு நடப்பதுதான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் மீதி கதை.
கதாநாயகன் பவிஷ் பார்ப்பதற்கு தனுஷை போன்ற தோற்றம் கொண்டவராக இருந்தாலும் சில இடங்களில் ஸ்கோர் செய்கிறார். ஆனால் சில இடங்களில் அவர் பேசும் வசனங்கள் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போன்ற இருக்கிறது. ஆனாலும் அனிகா, பிரியா வாரியர், சரண்யா மோகன், சரத்குமார் ஆகியோர் தங்களின் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளனர். மேலும் மேத்யூ தாமஸின் கதாபாத்திரம் சிரிக்க வைத்தாலும் இன்னும் வலுவாக அமைக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. அடுத்தது ஜி.வி. பிரகாஷின் இசை படத்திற்கு பலம் தந்திருப்பதைப் போல லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவில் காட்சிகள் வண்ணமயமாக்கப்பட்டுள்ளன.
அடுத்தது இந்த படம் வழக்கமான காதல் கதையாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் தொடர்புப்படுத்த முடியாததாக இருக்கிறது. இருப்பினும் படத்தை நன்றாக கொண்டு செல்ல வேண்டும் என முயற்சித்திருப்பது சிறப்பு. மேலும் படத்தில் பிளஸாக அமைந்திருந்தது எது என்றால் கோல்டன் ஸ்பேரோ பாடல் தான். இந்த பாடலுக்கு பிரியங்கா மோகன் நடனமாடியுள்ளார். இந்த பாடல் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறது. இறுதியில் காதல் – திருமணம் ஆகியவற்றை பற்றி இன்றைய தலைமுறையினர்கள் எப்படி யோசிக்கிறார்கள்? என்பதை திரைக்கதையின் வாயிலாக சொல்லி இருந்தாலும் சாமானிய மனிதனுடன் கனெக்ட் ஆகாதது சற்று ஏமாற்றத்தை தந்துள்ளது.