தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் கடந்த 2017 ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா ஆகியோரின் கூட்டணியில் ப. பாண்டி எனும் திரைப்படத்தை இயக்கி இயக்குனராக உருவெடுத்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தனது 50 வது படமான ராயன் திரைப்படத்தையும் தானே இயக்கி நடித்துள்ளார் தனுஷ். இந்த படம் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை முடித்த பின்னர் நடிகர் தனுஷ் மூன்றாவதாக புதிய படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். அந்தப் படத்திற்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், ரம்யா போன்ற பலரும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை தனுஷின் உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரித்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் இதன் இசையமைக்கும் பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் ராயன் திரைப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்த எஸ் ஜே சூர்யா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் குறித்து பேசி உள்ளார். அதன்படி “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படமானது மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பிரேமலு பட ஸ்டைலில் உருவாகியுள்ளது என்று கூறியிருக்கிறார். மேலும் நடிகர் தனுஷ், தான் அடுத்ததாக இயக்கி நடிக்கும் புதிய படத்தின் ஸ்கிப்டையும் தயார் செய்து வைத்துள்ளார். அதில் நடிப்பதற்கும் தயாராகிவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.