நடிகர் தனுஷ் கடைசியாக ராயன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத்தொடர்ந்து குபேரா போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கும் தனுஷ் தற்போது இட்லி கடை எனும் திரைப்படத்தையும் தானே இயக்கி நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் இந்த மாத இறுதிக்குள் நிறைவடைந்து விடும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் தனுஷ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். அதற்கு முன்னதாக பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் எனும் திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் தனுஷ். ராஞ்சனா, அத்ரங்கி ரே ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணை இருக்கிறது. அதன்படி இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனுஷ் இட்லி கடை படத்தில் பிஸியாக இருப்பதால் தேரே இஷ்க் மெய்ன் படத்தின் படப்பிடிப்பு (அடுத்த மாதம்) டிசம்பரில் தொடங்கப்படும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.